கோலாலம்பூர், நவ. 23-
நாட்டிற்கு தலைமையேற்பதற்கு பிரதமர் பதவிக்கு குறிவைத்து காயை நகர்த்தி வரும் பாஸ் கட்சி, அந்த கனவை மறந்து விடுமாறு முன்னள் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஜையிட் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
வருகின்ற பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை கைப்பற்றி விட முடியும் என்று பாஸ் கட்சியும், அதன் முன்னணி தலைவர்களும் மனப்பால் குடித்து வருகின்றனர். ஆனால், அது பாஸ் கட்சியின் பகல் கனவாகும் என்று கோத்தாபாரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜாயிட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
மலேசியாவைப் பொறுத்தவரையில் லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடக்கூடிய துணிச்சலும், ஆற்றலும் மிகுந்த ஒரு தலைவர் தேவை. ஆனால், அந்த சிறப்பு அம்சங்களை நிறைவு செய்யும் அளவிற்கு பாஸ் கட்சி இல்லை என்று ஜாயிட் இப்ராஹிம் தெரிவித்தார்.
பல்லிலனத்தவர்களையும், பன்முக கலாச்சாரங்களையும் கொண்ட ஒரு நாட்டில் நாட்டை மேம்படுத்துவதைவிடுத்து, 4 நம்பர் கடைகள், உடம்புப்பிடி நிலையங்கள், மதுபான கடைகள் போன்றவற்றை இழுத்து மூடுவதிலேயே கவனம் செலுத்தி வரும் பாஸ் கட்சியினர், பிரதமர் பதவியின் மகத்துவமான தேவையை அவர்களால் நிறைவு செய்ய முடியாது என்று ஜாயிட் இப்ராஹிம் குறிப்பிட்டார்.








