பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.02-
பாஸ் கட்சியையும் அம்னோ அம்னோவையும் இணைக்கும் MUAFAKAT NASIONAL கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியால் ஒற்றுமை அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், அவர்களின் 'மறுமலர்ச்சி' கனவுகள் ஆகியவை குறித்துக் கருத்து தெரிவித்த பிரதமர், "அவர்கள் சேர்வதும் பிரிவதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம்; அது எனது பிரச்சினையல்ல" என பதிலளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் மக்களின் நலனைப் பாதுகாப்பதிலும் மட்டுமே ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் முகைதீன் யாசின் விலகலுக்குப் பின் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், பாஸ் கட்சித் தலைவர் சனூசி முஹமட் நோர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இந்த விவாதம் அரசியல் களத்தில் சூடு பிடித்துள்ளது. அம்னோ கட்சியின் இளைஞர் அணியும் இது தொடர்பாக வரும் ஜனவரி 3-ஆம் தேதி சிறப்பு மாநாடு ஒன்றைக் கூட்டி தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தத் தயாராகி வருவதால் மலேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி சேர்வதிலும் பிரிவதிலும் தலையிட தங்களுக்கு நேரமில்லை என்றும், அடுத்த பொதுத்தேர்தல் வரை அரசாங்கம் வலுவாக இருக்கும் என்றும் பிரதமர் அன்வார் உறுதியளித்துள்ளார்.








