கோலாலம்பூர், நவ.13-
முன்னாள் நிதி அமைச்சரும், அம்னோவின் முன்னாள் பொருளாளரும், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பருமான துன் டாயிம் ஜைனுதீன் காலமானார். அவருக்கு வயது 86.
மூப்பின் காரணமாக சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த துன் டாயிம் ஜைனுதீன் டாயிம், இன்று காலை 8.21 மணிக்கு பெட்டாலிங் ஜெயா, அசுந்தா மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டார்.
அம்னோவின் முன்னாள் மூத்தத் தலைவரான டாயிம் ஜைனுதீனின் நல்லடக்கச் சடங்கு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

காலஞ்சென்ற டாயிம் ஸைனுதீன், நாட்டின் நிதி அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருந்த காலத்தில் முதல் முறையாக 1984 ஆம் ஆண்டிலிருந்து 1991 ஆம் ஆண்டு வரை டாயிம், நிதி அமைச்சராக பொறுப்பேற்று இருந்தார்.
அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு மலேசியா மட்டுமின்றி தென்கிழக்காசியா மற்றும் ஆசியாவை உலுக்கிய நிதி நெருக்கடியின் போது, மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியுற்ற போது, நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கு பிரதமர் துன் மகாதீரின் அழைப்பின் பேரில் 1999 ஆண்டு நிதி அமைச்சராக டாயிம் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார். அவர் 2001 ஆம் ஆண்டு வரையில் அப்பொறுப்பில் இருந்தார்.
கெடா, அலோர்ஸ்டார், Derga- வில் 1938 ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்தவரான டாயிம், தமது தொடக்கக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வியை பினாங்கில் முடித்தப்பின்னர் சட்டம் பயில்வதற்கு லண்டன் சென்றார்.

1957 ஆம் ஆம் ஆண்டு ஒரு வழக்கறிஞராக நாடு திரும்பிய டாயிம், பின்னர் நகர திட்டமிடல் படிப்பை மேற்கொள்வதற்கு அமெரிக்கா சென்றார். பெர்கிலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, நாடு திரும்பிய டாயிம், நகரத் திட்டமிடல் திட்டங்களில் ஈடுபடுவதற்கு சொந்த நிறுவனத்தை நிறுவி, அதில் தன்னை முழுமையாக பிணைத்துக்கொண்டார்.
கோலாலம்பூர் மாநகரில் செராஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள பழைய ஈயச்சுரங்கப்பகுதிகள் மூடப்பட்டு, தாமான் மலூரி எனும் மிகப்பெரிய வீடமைப்புத்திட்டத்தை நிறுவிய பெருமை டாயிம் ஸைனுதீனையே சேரும்.
கோலாலம்பூரில் அதிகமான நகர்ப்புற வீடமைப்புத்திட்டங்ளில் தன்னை ஈடுபட்டுத்திக்கொண்ட டாயிம், மாநகரில் கிட்டத்திட்ட 25 விழுக்காடு வீடமைப்புத்திட்டங்கள், அவரின் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
ஆகக்கடைசியாக தமது சொத்து விபரங்களை அறிவிக்கத் தவறியதற்காக துன் டாயிமும், அவரின் மனைவி தோ புவான் நைய்மா காலிடும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு ஆளாகி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








