கங்கார், டிசம்பர்.26-
உடல்நலக் குறைவு காரணமாக, பெர்லிஸ் மந்திரி பெசார் ஷுக்ரி ரம்லி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தனது பதவி விலகலுக்கு பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில் ஒப்புதல் வழங்கி விட்டதாக பாஸ் கட்சியின் சங்லாங் சட்டமன்ற உறுப்பினருமான ஷுக்ரி ரம்லி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள், பெர்லிஸ் ராஜாவைச் சந்தித்து, ஷுக்ரி ரம்லிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்வைத்தனர்.
இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை, நெஞ்சு வலி காரணமாக, கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷுக்ரி ரம்லி, மறுநாள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
இந்நிலையில், தன்னை மந்திரி பெசார் பதவியிலிருந்து வெளியேற்ற பெரிகாத்தான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர், மறைமுகமாகச் சதி வேலை செய்து வந்துள்ளதாக ஷுக்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னிடம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல், அவர்கள் பெர்லிஸ் ராஜாவைச் சந்தித்து தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்திருப்பது, ஒரு துரோகச் செயல் என்றும் விவரித்துள்ளார்.
இதனிடையே, ஷுக்ரிக்கு எதிராகச் செயல்பட்ட தனது 3 சட்டமன்ற உறுப்பினர்களைப் பாஸ் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்துள்ளது.
அதே வேளையில், பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த மற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அக்கட்சியை வலியுறுத்தியுள்ளது.








