கோலாலம்பூர், அக்டோபர்.30-
மலேசியா அடையப் பெற்று வரும் வளர்ச்சிக் கண்டு எதிர்க்கட்சியினர் மனசங்கடம் கொள்ள வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோலாலம்பூருக்கு வருகை புரிந்த போது வழங்கப்பட்ட மகத்தான வரவேற்பு மற்றும் அமெரிக்கவுடன் இணக்கம் காணப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து எதிர்கட்சியினர் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர் என்ற முறையில் மலேசியா, அமெரிக்க அதிபரின் வருகையின் மூலம் பல்வேறு நன்மைகளையும், அனுகூலங்களைப் பெற்று இருப்பதாக பிரதமர் விளக்கினார்.
குறிப்பாக, ஆசியான் தலைவர் என்ற முறையில் தம்மால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நேரடியாகச் சந்திப்பு நடத்த முடிந்தது. இந்த நேரடிச் சந்திப்பின் வாயிலாக தென்சீனக் கடல் சர்ச்சை மற்றும் காஸா பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான சூழல் போன்ற முக்கிய விவகாரங்களை நேரடியாக பேச முடிந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் என்ற முறையில் டொனால்ட் டிரம்புடன் தனிப்பட்ட முறையில் 40 நிமிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிட்டியதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் சுட்டிக் காட்டினார்.
டொனல்ட் டிரம்புடன் நேரடியாக சந்திப்பு நடத்திய மற்ற தலைவர்கள் யாரும் இந்த அளவிற்கு உண்மையாக, துணிச்சலாக, கண்டிப்பாக பேசியிருப்பார்களா? என்பது தமக்குத் தெரியாது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
டிரம்பின் வருகையின் மூலம் மலேசியாவிற்கு எவ்வளவே நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், அவை அவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை.. மாறாக, நான் நடனமாடியது மட்டுமே புனிதமானவர்கள் போல் பேசும் நமது நண்பர்களின் கண்களுக்குத் தெரிந்திருக்கிறது.
அது, மலாய், இந்தோ கலாச்சாரத்தைத் தாங்கிய பாரம்பரிய நடனமான ஸாபினே தவிர மேற்கத்தியவர்களின் தாங்கோ அல்ல என்று பிரதமர் விளக்கினார்.








