மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாக, மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப் ரவுஃப் யுசோ, மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முஹமட் அலி முஹமட் ருஸ்தாமைச் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை மலாக்கா முதலமைச்சர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவு தலைவர் நோர்ஹாஃபிஸா முஹமட் சத்தி கூறுகையில், இது போன்ற சந்திப்பு நடைபெற்றதாக தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும், அத்தகைய சந்திப்பு நடந்திருந்தால் முதலமைச்சர் அலுவலகம் உடனடியாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று மலாக்கா அனைத்துலக வர்த்தக மையமான எம்ஐடிசியில் இரு தலைவர்களும் சந்தித்து, மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டதாக வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்று பரவியது.
ஆனால், இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே இந்த வதந்திக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








