கோலாலம்பூர், ஜனவரி.18-
மலேசிய அரசியல் களத்தில் நீண்ட காலமாக நீடித்து வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பி.பி.பி என்றழைக்கப்படும் மக்கள் முற்போக்கு கட்சி தற்போது அதிகாரப்பூர்வமாக தேசிய முன்னணி கூட்டணியின் அங்கத்துவக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 72-வது பொதுக் கூட்டத்தில், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
கடந்த 2018-ல் பிரிந்த இந்த உறவு, பல சட்டப் போராட்டங்களுக்கும் தலைமைத்துவ மாற்றங்களுக்கும் பிறகு, சங்கங்களின் பதிவகத்தின் முறையான ஒப்புதலுடன் மீண்டும் மலர்ந்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 21-ம் தேதி கோத்தா கினபாலுவில் நடைபெறவுள்ள தேசிய முன்னணியின் உயர்மட்டக் கூட்டத்தில், இந்தக் கூட்டணி இணைப்பு முறைப்படி இறுதிச் செய்யப்பட்டு வரலாறு படைக்கப்படவுள்ளது. பல ஆண்டுகளாகத் தற்காலிகத் தடையைச் சந்தித்த இந்தக் கட்சி, தற்போது புத்துயிர் பெற்றுத் தனது பழைய பெயரான 'பி.பி.பி' என்பதோடு தேசிய அரசியலில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.








