Sep 23, 2026
Thisaigal NewsYouTube
91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு
அரசியல்

91 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு

Share:

போர்ட்டிக்சன், ஜூலை.28-

இன்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் 91.06 விழுக்காட்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையமான SPR தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் Datuk Khairul Shahril Idrus வெளியிட்ட அறிக்கையில், ராணுவம், போலீஸ் துறை மற்றும் அவர்களின் துணைவினர் அடங்கிய மொத்தம் 16,467 தகுதியான வாக்காளர்களில், 14,995 பேர் இன்று செவ்வாய்க்கிழமை தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 38 வாக்குச் சாவடிகளில் இந்த முன்கூட்டிய வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹரூண், முன்கூட்டிய வாக்குப் பதிவிற்கு 90 விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகக் கூறினார். எனினும், அண்மையில் நடந்து முடிந்த ஜோகூர் மாநிலத் தேர்தலின் 94.49 விழுக்காடு முன்கூட்டிய வாக்குப்பதிவை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த எண்ணிக்கை இலக்கை தாண்டும் எனத் தாம் நம்பியதாக அவர் தெரிவித்தார்.

மேலும், விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள பொது வாக்குப் பதிவு நாளில் 72 விழுக்காடு முதல் 75 விழுக்காடு வரையிலான வாக்குப் பதிவை தேர்தல் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத்தின் 36 தொகுதிகளுக்காக மொத்தம் 103 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News