அபு தாபி, டிசம்பர்.24-
ஐக்கிய அரபு சிற்றரசுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு, நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் அதிபர் ஷையிக் முகமட் பின் ஸையெட் அல் நயான் அரச மரியாதையுடன் வரவேற்பளித்தார்.
அபு தாபி Qasr Al Bahr கடற்கரை அரண்மனையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களும், இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவு மற்றும் மேம்பாடுகளை வலுப்படுத்துவது குறித்துக் கலந்தாலோசித்தனர்.
இச்சந்திப்பில் ஐக்கிய அரபு சிற்றரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அபு தாபியில் உள்ள முன்னணி பாதுகாப்பு நிறுவனமான EDGE குழுமத்தின் கீழ் செயல்படும், NIMR மற்றும் Caracal ஆகிய நிறுவனங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பார்வையிட்டார்.
அந்த இரு நிறுவனங்களும் இராணுவ வாகனங்கள் மற்றும் சிறு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்றவையாகும்.
இதனிடையே, Caracal-லில் உள்ள, 100 மீட்டர் துப்பாக்கிச் சுடும் தளத்தில், CSR-308 இரக துப்பாக்கியைப் பயன்படுத்திய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தனது குறிபார்க்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.








