கோலாலம்பூர், நவம்பர்.20-
பெரிக்காத்தான் நேஷனலின் வலிமை மிகுந்த ஒரு தலைவராகப் பார்க்கப்படும் லாருட் எம்.பி. டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடினை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிலிருந்து அகற்றும் முயற்சி, அந்தக் கூட்டணியின் தற்கொலை முயற்சிக்குச் சமமாகும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.
ஹம்ஸா ஸைனுடினை அகற்றி விட்டு, பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக புத்ராஜெயா எம்.பி. ரட்ஸி ஜிடினைக் கொண்டு வரும் முயற்சி, பேரிடருக்குச் சமமாகும் என்று Global Asia Consulting ஆய்வு மையத்தைச் சேர்ர்ந்த ஸாஹாருடின் சானி அஹ்மாட் சப்ரி கூறுகிறார்.
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான ஹம்ஸா ஸைனுடின், பெரிக்காத்தான் நேஷனலில் தனித்துவமான பலத்தைக் கொண்டுள்ளார். குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனல், பெர்சத்து கட்சி மற்றும் பாஸ் கட்சிக்கு இடையில் உறவை வலுப்படுத்தும் ஓர் பாலமாக விளங்கி வருகிறார்.
நியாயப்படி, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் என்ற முறையில் டான் ஶ்ரீ முகைதீன் யாசினே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்று இருக்க வேண்டும். ஆனால், அவரின் தலைமைத்துவ மாண்பியலை ஹம்ஸா ஸைனுடின் தனது தோளில் சுமந்து வருகிறார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ஹம்ஸா ஸைனுடின் அந்தப் பொறுப்பிலிருந்து அகற்றப்படுவாரேயானால், அது பெரிக்காத்தான் நேஷனலுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர் ஸாஹாருடின் சானி எச்சரித்துள்ளார்.








