கோத்தாகினபாலு, நவ. 19-
பெல்கிரா பெர்ஹாட்டின் 15 கோடி வெள்ளி முதலீட்டில் 28 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சபா மாநில பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் தற்காப்புவாதம் புரிய வேண்டும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்நது சபா மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வலுக்கத் தொடங்கியது.
சபா மாநில சட்டமன்றத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபா மாநிலம் மற்றும் மாநில மக்களின் நலனை முன்னெடுக்கக்கூடிய ஒரு தலைவரே சபா பாரிசான் நேஷனலுக்கு தேவையே தவிர லஞ்ச ஊழலில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய தலைவர் அல்ல என்று ஜி57 எனப்படும் மலேசிய மக்கள் சக்தி நடவடிக்கை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை அப்பீல் நீதிமன்றம் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. எனவே லஞ்ச ஊழல் வழக்கில் தாம் கைசுத்தமானவர் என்பதை நிரூபிப்பதற்கு வழிவிடும் வகையில் சபா மாநில பாரிசான் நேஷனல் தலைவர் பதவிலிருந்து புங் மொக்தார் விலக வேண்டும் என்று ஜி57 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.








