Jan 22, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தானில் இணைய மஇகா விண்ணப்பம் ஏற்பு: இனி முடிவெடுப்பது மஇகா கையில்- டான் ஶ்ரீ முகைதீன் அறிவிப்பு
அரசியல்

பெரிக்காத்தானில் இணைய மஇகா விண்ணப்பம் ஏற்பு: இனி முடிவெடுப்பது மஇகா கையில்- டான் ஶ்ரீ முகைதீன் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.22-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதற்கான மஇகாவின் விண்ணப்பத்தை அக்கூட்டணி ஏற்றுக் கொண்டுள்ளது. இனி அது குறித்த இறுதி முடிவு எடுப்பது அந்தப் கட்சியின் தலைமையிடமே உள்ளது என்று பெரிக்காத்தான் நேஷனல் முன்னாள் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டிலேயே மஇகாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு பெரிக்காத்தான் நேஷனல் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், தற்போது பாரிசான் நேஷனல் அங்கத்துவக் கட்சியான மஇகாவின் இறுதி முடிவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாகவும் முகைதீன் கூறினார்.

"அவர்கள் விண்ணப்பம் சமர்ப்பித்தது ஒன்றும் ரகசியமல்ல. நாங்கள் அதனைப் பரிசீலித்தோம். உண்மையில், மஇகாவை ஓர் உறுப்புக் கட்சியாக ஏற்றுக் கொள்வதற்கான முடிவு கடந்த ஆண்டே எடுக்கப்பட்டு விட்டது," என்று நேற்று இரவு சில ஊடகப் பிரதிநிதிகளுடனான நேர்காணலில் முகைதீன் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமரான முகைதீன், மஇகா தனது அரசியல் திசையையும், அதற்கான முடிவையும் எடுப்பதற்கான சரியான நேரத்தைத் தீர்மானிக்க அதன் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு அக்கட்சி அதிகாரம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

"மஇகா தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் எம். சரவணன் ஆகியோர் என்னுடன் கலந்துரையாட வரும்போதெல்லாம் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்," என்று கூறிய முகைதீன், மஇகா தங்களுக்கு ஆதரவான ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், மஇகா இந்தக் கூட்டணியில் இணைவது பெரிக்காத்தான் நேஷனலுக்குள் இந்தியச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்கும் என்றும், இதன் மூலம் வாக்காளர்களுக்குக் கூடுதல் தேர்வுகள் கிடைக்கும் என்றும் முகைதீன் கூறினார்.

Related News