மலாக்கா மாநிலத் தேர்தலில், புக்கிட் கத்தில் சட்டமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
அத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான 55 வயதான அட்லி ஸஹாரி, மூன்றாவது முறையாக வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கியுள்ளார்.
பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான ஒத்துழைப்பு இம்முறை தமக்குக் கடும் சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அட்லி ஸஹாரியை எதிர்த்து, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சியின் முஹமட் ரிட்ஸுவான் முஹமட் சரிஃப், சுயேச்சை வேட்பாளர் அபு பாக்கார் சபுடின், பெர்சாமா கட்சியைச் சேர்ந்த டாக்டர் அலிஸா சே அம்ரான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமது தரப்பு ஆற்றிய சேவைகளை மக்கள் மதிப்பீடு செய்து மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என அட்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், மீண்டும் வெற்றி பெற்றால் குழந்தைகள் மற்றும் தொழில்முனைவோருக்கான டிஜிட்டல் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், திட்டமிடப்பட்டுள்ள சுகாதாரப் பல்துறை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதும் முன்னுரிமையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன்முறையாக இத்தொகுதியைக் கைப்பற்றிய அட்லி, கடந்த 2021-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் 1,057 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








