மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, பிஎச் பிளஸ் எனப்படும் விரிவுபடுத்தப்பட்ட கூட்டணி குறித்த பேச்சுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 இடங்களில் அது வேட்பாளர்களைக் களமிறக்குகிறது.
இதனை மலாக்கா மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஶ்ரீ அட்லி ஸஹாரி இன்று தெரிவித்தார். முன்னதாக 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் தேர்தல் கட்டமைப்பு, வேட்பாளர்களின் திறன் மற்றும் மக்கள் ஆதரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேலும் மூன்று இடங்கள் சேர்க்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதன்படி, பிகேஆர் 10 இடங்களிலும், ஜசெக மற்றும் அமானா ஆகிய கட்சிகள் தலா ஏழு இடங்களிலும் போட்டியிடுகின்றன.
மூன்று கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபடும் என்றும் அட்லி தெரிவித்தார்.
இதற்கிடையில், அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், போட்டியின்றி எந்தத் தொகுதியும் வெற்றி பெறுவதைத் தமது கூட்டணி விரும்பவில்லை என்றும் மலாக்கா மாநில பிகேஆர் தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் குறிப்பிட்டார்.
28 தொகுதிகளுக்கு நடைபெறும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் நாளை, சனிக்கிழமை நடைபெறுகிறது.








