அரசியல் நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தமான சிஎஸ்எ புதிதான ஒன்றல்ல என்றும், இத்தகைய அரசியல் ஒத்துழைப்புகளின் மூலம் மக்களே மிகப் பெரிய பலனைப் பெற வேண்டும் என்றும் பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஃபூஸியா சாலே தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் அப்போதைய அரசாங்கத்துடன் அரசியல் நிலைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அரசியல் நிலைத்தன்மையையும் சுமுகமான நிர்வாகத்தையும் உறுதிப்படுத்துவதே அப்போதைய ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய ஒத்துழைப்புகள் அரசாங்கம் சீர்திருத்தங்களையும் நாட்டின் மேம்பாட்டையும் முன்னெடுக்க உதவுவதுடன், இறுதியில் மக்களின் நலனுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பயனளிக்க வேண்டும் என்றும் ஃபூஸியா சாலே வலியுறுத்தினார்.








