நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தாலும், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மடானி அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பதாக தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சரும் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் அளவு அல்லது அரசியல் பலத்தைப் பொருட்படுத்தாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மடானி அரசாங்கம் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார். பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயல்படலாம் என்று கருதாமல், எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்றார்.
ஜனநாயகப் பேச்சுவார்த்தைகளைவிட அரசியல் விளம்பரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் சில கூட்டணிகளைப் போலன்றி, மடானி அரசாங்கம் கண்ணியம், பரஸ்பர மரியாதை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கான உறுதிப்பாட்டுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.








