பினாங்கு, டிச.3-
பினாங்கு மாநிலத்தில் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்தவர்கள், மாநில அரசின் வீட்டுத் தகவல் முறை அமைப்பான எஸ்.எம்.பி.-யில் தத்தம் விண்ணப்பங்களை ஆப்டேட் செய்து கொள்ளுமாறு பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கிக்கொள்வதற்கு ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் தங்கள் விண்ணப்பத்தை அவ்வப்போது நிகழ்நிலைப்படுத்திக்கொள்ளுமாறு டத்தோஸ்ரீ சுந்தராஜு அறிவுறுத்தினார்.
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி பினாங்கு அரசின் ரூமா மம்பு மிலிக்கி எனும் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்த தகுதி பெற்ற 13 விண்ணப்பத்தாரர்களின், பிரத்தியேக வீடமைப்புத் திட்டத்தின் எஞ்சியுள்ள 13 வீடுகளுக்கான வீட்டு முன்னுறுதி கடிதத்தை வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு மேற்கண்டவாறு கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் வீடமைப்புத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் என்று முறையில் மாநில அரசின் வாங்கத்தக்க வீடமைப்புத்திட்டங்களில் வீடுகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு உரிய ஆலோசனையும், வழிகாட்டலையும் வழங்குவதற்கு தம்முடைய அலுவலகம் எப்போதுமே திறந்திருக்கும் என்பதுடன் தமது அதிகாரிகளும் உரிய உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
அந்த வகையில் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்த தகுதி வாய்ந்த இந்த 13 பேரும் வெகுகாலமாக காத்திருந்ததையும் டத்தோ சுந்தராஜு சுட்டிக்காட்டினார்.
தங்கள் விண்ணப்பங்கள் குறித்து SMP- முறையில் அவ்வப்போது ஆப்டேட் செய்து கொள்ளாத காரணத்தினால் அவர்களின் விண்ணப்பங்களை மேம்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார்.
எனினும் பினாங்கு மாநிலத்தில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலத்தில் பிரகாசமான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தக்கூடிய பலதரப்பட்ட வசதிகளை கொண்ட வியூகம் நிறைந்த தீமோர் லாவுட் மாவட்டத்தில் இவர்களுக்கு வீடுகள் கிடைத்திருப்பது தொடர்பில் அந்த 13 பேருக்கும் டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இத்தகைய வீடுகளை பெற்றவர்கள், அடுத்த பத்து ஆண்டு காலத்திற்கு அந்த வீடுகளை வாடகைக்கு விடுவதோ அல்லது விற்பதற்கோ தடை விதிக்கப்படுகிறது. உண்மையிலேயே வீட்டுத்தேவை உள்ள குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை காட்டப்படுவதால் நடப்பு நிபந்தனையை பின்பற்றுமாறு முன்னுறுதி கடிதத்தை பெற்றுக்கொணட் 13 பேருக்கும் டத்தோஸ்ரீ சுந்தராஜு அறிவுறுத்தினார்.








