Jul 23, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் ஜெயாவில் பக்காத்தான் வேட்பாளர் முகுந்தனை ஆதரித்து ஜசெக தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம்
அரசியல்

சிரம்பான் ஜெயாவில் பக்காத்தான் வேட்பாளர் முகுந்தனை ஆதரித்து ஜசெக தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பக்காத்தான் ஹராப்பனின் ஜசெக கோட்டையாக இருந்து வரும் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்வதற்காக, கட்சியின் முன்னணி இந்தியத் தலைவர்கள் நேற்று அதிரடியாகக் களமிறங்கி தீவிர சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.

சிரம்பான் ஜெயா தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவும் வேளையில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் களம் காணும் வேட்பாளர் எஸ். முகுந்தனை வெற்றி பெறச் செய்வதற்காக இந்தியத் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

கடந்த நான்கு தவணைகளாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகச் சேவையாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி.குணசேகரன் தலைமையில், ஜசெக-வின் முக்கிய இந்தியத் தலைவர்கள் நேற்று இரவு சிரம்பான் ஜெயாவிற்கு உட்பட்ட தாமான் துங்கு அம்புவான் நஜிஹா பகுதிக்குச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சாரத்தில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர், முன்னாள் ஜசெக. எம்.பி. கஸ்தூரி பட்டு, செனட்டர் லிங்கேஸ்வரன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உட்பட முன்னணி தலைவர்கள் களம் இறங்கி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தன் வெற்றிப் பெற வேண்டிய அவசியத்தை தொகுதி வாக்காளர்களுக்கு விளக்கினர்.

வாக்காளர்களிடையே பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி. குணசேகரன், இளைய தலைமுறையினருக்கு வழிவிடும் நோக்கிலேயே தாம் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்று விளக்கமளித்தார். இருப்பினும், தமக்கு அடுத்தபடியாகக் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் முகுந்தன் புதியவர் அல்லர் என்றும், 2012 ஆம் ஆண்டு முதல் தம்முடன் இணைந்து இத்தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றி வரும் அனுபவமிக்கவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரச்சாரத்தில் பேசிய ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர், "ஜசெக-வின் முக்கியத் தலைவர்களுடன் அணுக்கமான தொடர்பைக் கொண்டுள்ள முகுந்தன், மக்கள் சேவையில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து வருபவர். அவர் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொகுதி மக்களுக்கு இன்னும் மிகச் சிறப்பான மற்றும் செம்மையான சேவையை வழங்குவார் என்று தாம் உறுதியாக நம்புவதாக" தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு பேசுகையில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாடு கடுமையான நெருக்கடியைச் சந்தித்தபோது, களத்தில் நின்று தொகுதி மக்களுக்கு முகுந்தன் ஆற்றிய சேவையை மக்கள் இன்னும் நினைவுகூர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். இது அவரின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த அங்கீகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை அவருக்கு வாக்களித்து சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்வதை ஒவ்வொரு வாக்காளரும் தங்களின் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

கடந்த 18 ஆண்டுகால மக்கள் சேவைத் தொடர்ச்சியைத் தக்கவைக்க, சிரம்பான் ஜெயா தொகுதி வாக்காளர்கள், எஸ். முகுந்தனுக்கு பேராதரவு வழங்க வேண்டும். அனுபவமிக்க இளைய தலைவரான முகுந்தனின் கரங்களை வலுப்படுத்த, தலைவர்கள் ஒருமித்த குரலில் அறைகூவல் விடுத்துள்ளனர்.

Related News

பாரிசான் நேஷனல் -  பெரிக்காத்தான் கூட்டணிகளின் முழக்கம் அதிகாரத்திற்கான போலி நாடகம்: காலிட் சமாட் சாடல்!

பாரிசான் நேஷனல் - பெரிக்காத்தான் கூட்டணிகளின் முழக்கம் அதிகாரத்திற்கான போலி நாடகம்: காலிட் சமாட் சாடல்!

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை: ஜாகித் ஹமிடி

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம் இல்லை: ஜாகித் ஹமிடி

நிலையான ஆட்சி அமைந்தால் மட்டுமே நீடித்த வளர்ச்சி சாத்தியம்: ரெப்பா வேட்பாளர் எஸ். வீரப்பன் வலியுறுத்தல்

நிலையான ஆட்சி அமைந்தால் மட்டுமே நீடித்த வளர்ச்சி சாத்தியம்: ரெப்பா வேட்பாளர் எஸ். வீரப்பன் வலியுறுத்தல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வேட்பாளர்: ஹம்சா விளக்கம்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் வேட்பாளர்: ஹம்சா விளக்கம்

2027 -ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவுத் திட்டம் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் / பிரதமர் அன்வார் அறிவிப்பு

2027 -ஆம் ஆண்டிற்கான தேசிய வரவு செலவுத் திட்டம் அக்டோபரில் தாக்கல் செய்யப்படும் / பிரதமர் அன்வார் அறிவிப்பு

பெர்சத்துவை குறைத்து மதிப்பிட வேண்டாம்: காலிட் நோர்டின்க்கு முகைதீன் யாசின் பதிலடி

பெர்சத்துவை குறைத்து மதிப்பிட வேண்டாம்: காலிட் நோர்டின்க்கு முகைதீன் யாசின் பதிலடி