ஷா ஆலாம், செப்டம்பர்.06-
நாட்டின் சுதந்திரத்தை முன்னெடுத்த முக்கியக் கட்சிகளான மஇகா மற்றும் மசீச. 68 ஆண்டு காலக் கூட்டணியுடன் ஒன்றித்த பெரும் வரலாற்றைக்கொண்டிருந்த நிலையில், அவ்விரு கட்சிகளும் முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் இணையலாம் என்று ஆருடங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி வருகின்றன.
டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைவராகக் கொண்டுள்ள பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா இளைஞர் பிரிவு கலந்து கொண்டது, இந்த ஆருடத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இன்று நடைபெற்ற பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு மாநாட்டில் மஇகா தேசிய இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் K. கேசவன் கலந்து கொண்டது மூலம் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைப்பும், பிணைப்பும் ஏற்படத் தொடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
பெர்சத்து கட்சி விடுத்த அழைப்பை ஏற்று அவர்களின் மாநாட்டில் தாம் கலந்து கொண்டதாக கேசவன் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலில் மஇகா இணைவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறதா? என்று கேட்ட போது, அது கட்சியின் தலைவரைப் பொறுத்தது என்று கேசவன் பதில் அளித்தார். அவர்கள் முதல் முறையாக எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அழைப்பை ஏற்று நாங்கள் மாநாட்டிற்கு வந்திருக்கிறோம் என்று கேசவன் தெரிவித்தார்.
மஇகாவிற்கு பெர்சத்து கட்சி அழைப்பு விடுத்து இருப்பதை கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் உறுதிப்படுத்தினார். அவர்கள் விடுத்த அழைப்பின் காரணமாக எங்களின் பிரதிநிதி கேசவன் பெர்சத்து மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார் என்று டத்தோ ஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.