கோலாலம்பூர், டிச.13-
நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் இன மற்றும் அரசியல் விவகாரங்களை கலக்கக்கூடாது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் சுற்றுலா துறை அமைச்சு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும், இந்த முயற்சிகள் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. அரசாங்கம் சீன சுற்றுப் பயணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர் என அவர் சொன்னார்.
சுற்றுலா ஊக்குவிப்பு குறித்து, குறிப்பாக சீன சுற்றுப் பயணிகளுக்கு எதிராக சில தரப்பினர் அரசியல் மற்றும் இன விவகாரங்களை எழுப்பி வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் அரசாங்கத்தின் முயற்சியை இச்செயல் மந்தமாக்கும் என்றார்.








