கோத்தா கினபாலு, ஜனவரி.10-
கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நிறைவு பெற்றது.
அதன் அடிப்படையில், கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. அதே வேளையில், லாமாக் சட்டமன்றத் தொகுதியில் நேரடிப் போட்டியும் நிலவுகிறது.
பாரிசான் நேஷனல் வேட்பாளர் நாயிம் குர்னியாவான் புங்கை எதிர்த்து, வாரிசான் கட்சியைச் சேர்ந்த டத்தோ சாடி அப்துல் ரஹ்மானும் , சுயேட்சை வேட்பாளரான வழக்கறிஞர் கோல்டாம் ஹாமிட்டும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், லாமாக் சட்டமன்றத் தொகுதியில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் முஹமட் இஸ்மாயில் அயோப்பை எதிர்த்து வாரிசான் கட்சியைச் சேர்ந்த அப்துல் மாலேக் சுவா வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலானது இன்று காலை 10 மணியளவில் நிறைவுக்கு வந்ததாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கினாபாத்தாங்கான் நாடாளுமன்றம் மற்றும் லாமாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ புங் மொக்தார் ராடின், கடந்த ஆண்டு, டிசம்பர் 5ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, அவரது தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 15-ஆவது பொதுத்தேர்தலில், கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதியில், வாரிசான் வேட்பாளர் மஸ்லிவாத்தி அப்துல் மாலேக்கை எதிர்த்துப் போட்டியிட்ட புங் மொக்தார், 4,330 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அதே வேளையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 17-வது சபா மாநில சட்டமன்றத் தேர்தலில், லாமாக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 6 பேரில், 153 வாக்குகள் பெரும்பான்மையில் புங் மொக்தார் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








