கோலாலம்பூர், டிசம்பர்.22-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் தொடர்பில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மீதான விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் என்று அம்னோ தலைவர் டத்தோஸ் ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மாமன்னர் பிறப்பித்ததாகக் கூறப்படும் அரசாணை உத்தரவு தொடர்பில் நஜீப்பின் விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் உயர் நீதிமன்ற முடிவு தொடர்பில் டிஏபி- யைச் சேர்ந்த சில தலைவர்கள் உச்சிக் குளிர்ந்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் துணைப்பிரதமருமான அஹ்மாட் ஸாஹிட் இந்த நினைவுறுத்தலை வழங்கினார்.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, "இந்த ஆண்டின் இறுதியைச் சிறப்பாகக் கொண்டாட மற்றொரு காரணம் தமக்குக் கிடைத்துள்ளது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான யியோ பீ யின் தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
யியோ பீ யினின் இந்தக் கருத்துக்கு அம்னோ தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது இந்த நிலைப்பாடு "மனிதாபிமானமற்றது" மற்றும் "அநாகரீகமானது" என்று அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி விமர்சித்துள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கியக் கட்சியின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, முன்னாள் பிரதமர் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை இவ்வாறு கொண்டாடுவது முறையல்ல என்றும், இது கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்றும் அம்னோ தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.








