ஷா ஆலாம், நவ. 16-
சிலாங்கூர் மாநிலத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மாநில மேம்பாட்டையும் அதேவேளையில் மக்கள் நலனை அதிகம் சார்ந்து இருக்கும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி அறிவித்துள்ள வேளையில் மக்கள் நலன் சார்ந்த 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு வரவேற்றுள்ளார்.
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியினால் நேற்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்து ஆலயங்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், சீனக்கோவில்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு 60 லட்சம் வெள்ளியிலிருந்து 80 லட்சம் வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மாபெரும் வெற்றியாகும் என்று பாப்பாராயுடு வர்ணித்துள்ளார்..
பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கதாகும். எனினும் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற காரணத்தினால், டிப்ளோமா மற்றும் டிகிரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை குறைக்கப்பட்டுள்ளதாக பாப்பாராயுடு குறிப்பிட்டார்.
டிப்ளோமாவிற்கு மூவாயிரம் வெள்ளியும், டிகிரி பட்டப்படிப்புக்கு 5 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்பட்டு வந்தது.
எனினும் இம்முறை டிப்ளோமாவிற்கு 2 ஆயிரம் வெள்ளியும், டிகிரி பட்டப்படிப்புக்கு மூவாயிரம் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாப்பா ராயுடு விளக்கினார்.








