சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேர் வரும் திங்கட்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர் . இந்நிலையில் இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக டிஏபி சார்பில் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அதிரடி மாற்றமாக அப்பதவி, முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவின் தம்பி வீ. பாப்பாராய்டு விற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இரண்டு தவணைக்காலம் ஆட்சிக்குழுவில் இடம் பெற்று இருந்த கணபதிராவ், இம்முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக, கணபதிராவின் தம்பியான பாப்பாராய்டு ,டிஏபி சார்பில் பக்காத்தான் வேட்பாளராக பந்திங் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, அமோக வெற்றிப்பெற்றார்.
இந்நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த கணபதிராவிற்கு அடுத்து இம்முறை அவரின் தம்பி பாப்பாராய்டு, இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக டிஏபி சார்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்படலாம் என்று மலேசிய அரசிதழ் கோடிகாட்டியுள்ளது.
பாப்பாராய்டு, இதற்கு முன்பு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிள்ளான் நாடளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்டு கணபதிராவ் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து அவர் இம்முறை சட்டமன்றத்திற்கு போட்டியிடவில்லை. மாறாக, அவரின் சகோதரர் பாப்பாராய்டு பந்திங்கில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பாப்பாராய்டு விற்கு மேலும் ஓர் அங்கீகாரமாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் இந்தியர்களின் பிரதிநிதியாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








