மாராங், ஜனவரி.23-
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி, இனி பாஸ் கட்சி பிடியில் சிக்கிய நிலையில் அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சிம்மாசனம் பாஸ் கட்சி வசமாகியது என்று அடித்து சொல்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங்.
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவராக இருந்த டான் ஶ்ரீ முகைதீன் யாசின் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து, அக்கூட்டணியைப் பாஸ் கட்சி தலைமையேற்று வழிநடத்தும் என்று ஹாடி அவாங் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் மாநாடான Muktamar- ரில் நிறைவேற்றப்பட்ட முந்தைய தீர்மானத்தின்படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹாடி அவாங் சுட்டிக் காட்டினார்.
கூட்டணியின் புதிய தலைவர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், பாஸ் கட்சியிடம் தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான நிர்வாக ரீதியான சந்திப்புகள் இன்னும் ஓரிரு வாரங்களில் இறுதி செய்யப்படும் என்று அவர் விளக்கியுள்ளார்.








