நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையிலான உடன்பாடு வெற்றி பெற்றால், அது 16-ஆவது பொதுத்தேர்தல் வரை நீடிக்கலாம் என்று ஜசெக பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானை வீழ்த்துவதற்கு இந்த இரு கூட்டணிகளும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை ஒரு பரீட்சார்த்த முயற்சியாகப் பயன்படுத்துகின்றன. இதில் அவர்கள் வெற்றி பெற்றால், மலாய் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் வரும் தேர்தல்களிலும் இக்கூட்டணியைத் தொடர ஊக்குவிக்கப்படுவர்.
எனினும், அரசியலில் ‘ஒன்றும் ஒன்றும் இரண்டு’ என்ற கணக்கு எப்போதும் பலிக்காது என்றும், இந்த அரசியல் தர்க்கத்தை மலாய் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் லோக் குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் பாரிசான் நேஷனல் 25 இடங்களிலும், பெரிக்காத்தான் நேஷனல் 11 இடங்களிலும் போட்டியிடும் வேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 36 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.








