கோலாலம்பூர், டிசம்பர்.15-
பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறப் போவதாக பூச்சாண்டிக் காட்டிக் கொண்டு இருக்கும் மஇகாவிற்கு, டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி நேற்று விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள மஇகாவின் இளைஞர் பிரிவு, தங்கள் தோல்விகளையும் இயலாமைகளையும் மறைக்க முயற்சிக்கிறது என்று பகான் டத்தோ அம்னோ இளைஞர் பிரிவு சாடியுள்ளது.
மஇகா இளைவுத் தலைவர் கே. அறிவிந்த், பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மாட் ஸாஹிட்டைச் சீண்டிப் பார்க்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையானது, உணர்ச்சியின் வேகத்தில் கொப்பளிக்கப்பட்ட சூடான வார்த்தைகளாகும். இது மஇகாவின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று பகான் டத்தோ இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் நபில் சால்லே தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் எதார்த்தைப் புரிந்து கொள்ள முடியாமல் மஇகா இன்னமும் பின்தங்கியிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பகலில் ஒன்றைச் சொல்லி விட்டு, இரவில் வேறொன்றைச் சொல்வதாக அம்னோ தலைவர் ஸாஹிட்டை மஇகா இளைஞர் பிரிவு சாடியுள்ளது. இது உண்மையிலேயே மஇகாவின் இயலாமையையும், தோல்வியையும் மூடி மறைக்கும் முயற்சியாகும்.
பாரிசான் நேஷனலில் இருப்பதா? இல்லையா? என்பது குறித்து மஇகா மாநில மாநாடுகளில் ஒரு தீர்மானம்? மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் மற்றொரு தீர்மானம், பிறகு மத்திய செயலவையில் முடிவு எடுக்கப்படும் என்று இன்னொரு தீர்மானத்தைச் சொல்லக்கூடிய கட்சி அல்ல அம்னோ.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ இணைந்தது, அதிகாரப் போதையல்ல. மாறாக, முன்னாள் மாமன்னர் வழங்கிய உபதேசமாகும். நாடு உறுதியற்ற தன்மையில் இருப்பதைத் தவிர்க்க, கூட்டு அரசாங்கத்தை அமைக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, அடுத்த பொதுத் தேர்தல் வரை ஓர் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்த முன்னாள் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
மாமன்னரின் அந்த அறிவுறுத்தலை மதிக்கும் கட்சி அம்னோ. எனவேதான் ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைக்க அதில் அம்னோ இணைந்தது.
இந்த ஒரு சிறிய விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் மஇகாவிற்கு, கதவடைப்பு செய்யப்படுவது குறித்து பாரிசான் நேஷனல் தலைவர் என்ற முறையில் அஹ்மாட் ஸாஹிட் விடுத்த கடும் எச்சரிக்கை பொறுத்தமான பதிலடியாகும் என்று நபில் சால்லே தெரிவித்துள்ளார்.








