பெர்மாத்தாங் பாவோ, நவம்பர்.08-
தம்மை பதவி விலகக் கோரி, இரண்டாவது முறையாக மாபெரும் பேரணி நடத்தப்படுவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது என்ற போதிலும் இந்த மிரட்டலைக் கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மக்கள் நலனுக்காக தமது தலைமையிலான மடானி அரசாங்கம் கொண்டுள்ள திட்டங்களை அமல்படுத்துவதில் தம்முடைய போராட்டம் தொடரும் என்றும் தம்மை பதவி விலகச் சொல்லி நடத்தப்படும் போராட்டம், தம்முடைய மன உறுதியை அசைக்காது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
இன்று பினாங்கு, செபராங் பிறை, பெர்மாத்தாங் பாவோவில் மடானி பள்ளி வாசலை மேம்படுத்தும் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போது தம்முடைய சிந்தனையும், நோக்கமும் மக்கள் நலன் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில்தான் உள்ளது. இது போன்ற மிரட்டல்கள் தம்மை அசர வைக்காது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.








