கோலாலம்பூர், டிச.16-
அவதூறு வழக்கில் 14 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை கோருவதில் வெற்றி பெற்ற DAP தலைவர் லிம் குவான் எங்கிற்கு, முதல் கட்டமாக வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 4 லட்சம் ரிங்கிட்டை செலுத்தியாக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
முகைதீன் யாசினுக்கு எதிராக லிம் குவான் எங் தொடுத்திருந்த அவதூறு வாக்கில் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அளிக்கப்பட்ட 14 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டுத்தொகையில் முதல் கட்டமாக இந்த தொகையை ஆண்டு இறுதிக்குள் அவர், லிம் குவான் எங்கிடம் செலுத்தியாக வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின் தமது தீர்ப்பில் தெரிவித்தது.
எஞ்சிய 10 லட்சம் ரிங்கிட்டை வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் முகைதீன் செலுத்தியாக வேண்டும் என்று லிம்மின் வழக்கறிஞர் குவாக் ங்கே சியோங், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இஸ்லாயிய தொண்டு நிறுவனமான யாயாசான் அல்புகாரிக்கு வரி விதிக்குமாறும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்தும்படி உத்தரவிடுமாறும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் நிதி அமைச்சர் என்ற முறையில் தாம் உத்தரவிட்டதாக , உண்மைக்கு புறப்பான தகவலை முகைதீன் தமது முகநூலில் பதிவு செய்ததாக லிம் குவான் எங் தமது அவதுறு வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
,முஸ்லீம்கள் தம்மீது வெறுப்புக்கொள்ளும் அளவிற்கு தமக்கு எதிராக பொய்யை பரப்பியதாக முகைதீன் மீது லிம் குவான், இந்த அவதூறு வழக்கில் தொடுத்து இருந்தார்.