மலாக்கா தேர்தலில் பாரிசான் நேஷனல் உடன் இணைந்து பாஸ் போட்டியிடும் பட்சத்தில், பாரிசான் நேஷனல் சின்னத்தை பயன்படுத்துவது குறித்து தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஸ் போட்டியிடும் பட்சத்தில், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பயன்படுத்தியதைப் போல, தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிடுவதையே அக்கட்சி விரும்பும் என தாம் நம்புவதாகவும் அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பாரிசான் நேஷனல் சின்னத்தை பயன்படுத்த பாஸ் விரும்பினாலும், அது அந்தக் கட்சியின் முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மலாக்கா தேர்தலில் பாரிசான் உடன் ஒத்துழைப்பு ஏற்பட்டால், அவர்களின் சின்னத்தை பயன்படுத்த பாஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








