கோலாலம்பூர், நவ. 21-
தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நாட்டின் கல்வி பேராளர்கள் குழுவை வரவேற்று, உபசரித்து, கல்வித் தொடர்புடைய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ள கல்வி அமைச்சர் ஃபாட்ஹிலினா சீடேக்கின் நடவடிக்கையை கேள்வி எழுப்பிய டிஏபி தலைவர் லிம் குவான் எங்கை, பாஸ் கட்சி இன்று கடுமையாக சாடியது
இம்மாதம் முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் நாட்டின் கல்வி தலைமை இயக்குநர் தலைமையில் அந்நாட்டின் பேராளர்கள் குழுவின் வருகையை கேள்வி எழுப்பியது மூலம் மலேசியாவின் தோற்றத்திற்கு லிம், களங்கத்தை விளைவித்துள்ளார் என்று பாஸ் கட்சித் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் ஃபாட்ஹிலினா சீடேக்கின் இந்நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் கல்விக்குழுவுடன் நுண்ணறிவை பகிர்ந்து கொள்ளும் அரசாங்கத்தின் ஒரு முன் முயற்சியாகும். மலேசியாவின் நிபுணத்துவத்தை, புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்வதில் லிம் குவான் எங் அப்படியென்ன குற்றத்தை கண்டு பிடித்து விட்டார் என்று துவான் இப்ராஹிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வித்துறையில் ஆப்கானிஸ்தானுடன் ஒத்துழைப்பு கொள்வதற்கு கல்வி அமைச்சர் ஃபாட்ஹிலினா சீடேக் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாஸ் கட்சி வரவேற்பதாக இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் துவான் இப்ராஹிம் இதனை தெரிவித்துள்ளார்.








