கோலாலம்பூர், நவம்பர்.20-
பாஸ் கட்சி, அன்னாந்து பார்த்தவாறு தன் முகத்திலேயே காரி உமிழ்கிறது என்று ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் சாடியுள்ளார்.
பாஸ் கட்சி, அரசியலில் நடுத்தர மற்றும் மிதமான தன்மையைத் தேர்வு செய்யாமல், நீண்ட காலமாகவே இன மற்றும் மதப் பிரச்சினைகளில் விளையாடி வருவதால், இறுதியாக Kedah Rubber City அடிக்கல் நாட்டு விழாவில் அடிக்கல்லில் சீன எழுத்து எழுதப்பட்ட பிரச்சினை, பாஸின் உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது என்று வூ கா லியோங் குறிப்பிடடார்.
பாஸ் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இந்த நேரத்தில் பல இன சமூகத்திற்கு எதிரான தப்பெண்ணத்தின் அடிப்படையில் அரசியல் சொல்லாட்சியைக் கட்டியதன் விளைவு இதுதான் என்று வூ கா லியோங் வர்ணித்தார்.
ஒரு சீனக் கோயில் நிகழ்ச்சியில் சீனப் பிரஜைகள் சீனக் கொடியைப் பறக்க விட்ட சம்பவத்தின் போது, அவதூறு சொல்வதில் பெயர் பெற்ற பேராவின் அப்போதைய பாஸ் தலைவர் மற்றும் அவரது சகாக்கள் மலேசியாவில் உள்ள சீனர்கள் "ஒரு வெளிநாட்டுக் கொடியை உயர்த்திப் பிடித்ததாகக் குற்றஞ்சாட்டினார். மலேசியாவில் உள்ள சீன சமூகம், தங்கள் ஒந்தச்த்ச் தாயகத்தை மதிக்கவில்லை என்ற மறைமுகமான அர்த்தத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
பேராக்கில் தேசிய தினத்தன்று பேராக் சுல்தான் மீது தாக்குதல் நடந்தபோது, தாக்குதலில் ஈடுபட்டது ஒரு சீனப் பெண் என்று அந்நிகழ்வில் கலந்து கொண்ட பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார். இறுதியில் அந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று போலீஸ் படை ஆதாரத்துடன் விளக்கியப் பின்னர் இனவெறி சமூக ஊடகப் பதிவு நீக்கப்பட வேண்டியிருந்தது.
அவதூறுக்கும், அடிப்படை குற்றச்சாட்டுகளுக்கும் பிரசித்திப் பெற்றவர்களான பாஸ் தலைவர்கள் தற்போது தங்கள் முகத்திலேயே காரி உமிழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்பதற்கு Kedah Rubber City அடிக்கல் நாட்டு விழா சம்பவம் நிரூபணமாக்கியுள்ளது என்று வூ கா லியோங் வர்ணித்தார்.








