கோத்தா கினபாலு, டிசம்பர்.02-
நடந்து முடிந்த சபா சட்டமன்றத் தேர்தலில் தமது தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்குத் தாம் முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சபாவின் பிரதான எதிர்க்கட்சியான வாரிசானின் தலைவர் டத்தோ ஶ்ரீ ஷாபி அஃப்டால் மறுத்தார்.
எப்போதும் நேர்மையும், தலைமைத்துவமும், நம்பகத்தன்மையும் பொதுமக்கள் வழங்குகின்ற கருத்திணக்கத்தின் வாயிலாக பெற வேண்டும் என்ற கொள்கையில் வாரிசான் கட்சி உறுதியாக இருக்கிறது.
அதே போன்று சபா மக்களின் கருத்திணக்கத்தையும், ஜனநாயக முறைப்படி அவர்கள் எடுக்கின்ற முடிவையும் வாரிசான் கட்சி மதிக்கிறது என்று ஷாபி அஃப்டால் குறிப்பிட்டார்.
சபா மாநிலத்திற்குச் சேவையாற்றுவதற்கும், அதன் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்கும், கண்ணியம் காக்கப்படுவதற்கும் மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு ஏற்ப அவற்றை நிறைவேற்றுவோம் என்று சபா தேர்தலில் 25 சட்டமன்றத் தொகுதிகளை வென்ற இரண்டாவது மிகப் பெரிய கட்சியான வாரிசான் தலைவர் ஷாபி அஃப்டால் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








