நெகிரி செம்பிலானில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சியாக, அம்மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், மாநில ஆட்சியாளர் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரை இன்று செவ்வாய்க்கிழமை காலை நேரில் சந்தித்தார்.
இதற்காக அவர் சுமார் காலை 10.50 மணியளவில் இஸ்தானா ஹிங்காப் அரண்மனைக்கு வருகை புரிந்தார்.
அவருடன் சுங்கை ஊஜோங் உண்டாங் முஹமட் ஃபாரிஸ் ஜோஹாரி, ரெம்பாவ் உண்டாங் ஹசான் அப் ஹாமிட் மற்றும் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் ஆகியோரும் உடன் வந்தனர்.
இந்த நெருக்கடிக்கு சிறந்த தீர்வு காண மாநில ஆட்சியாளரை சந்திப்பதுடன், உண்டாங் மற்றும் இதர பாரம்பரியத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துமாறு அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்மாயில் லாசிமுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, மாநில அரசியலமைப்பு, மரபுகள் மற்றும் நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, மாநில நிர்வாகம் தொடர்ந்து சுமுகமாக செயல்படுவதற்கான தீர்வை காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பதவியேற்பு உறுதிமொழியை மீறியதாகக் கூறி, யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி 10 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களை ரத்து செய்திருந்தார்.
அவர்கள், துவாங்கு முஹ்ரிஸை பதவியில் இருந்து நீக்கும் பிரகடனம் உண்டாங் தலைவர்களால் கையெழுத்திடப்பட்டு, பின்னர் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் கையெழுத்திட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்ததாக செப்டம்பர் 15-ஆம் தேதி தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அந்த 10 முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களிடமும் புக்கிட் அமான் போலீசார் நேற்று தனித்தனியாக வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மேலும், மாநில அரசியலமைப்பு மற்றும் மரபுசார் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஆட்சியாளருடன் இஸ்மாயில் லாசிமின் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.








