ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு, குறிப்பாக முதியவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பெண்களுக்கு மாநில அரசின் திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய அரசின் நலனுதவிகளையும் ஒருங்கிணைத்து வழங்க தாம் சிறப்புத் திட்டத்தை கொண்டுள்ளதாக பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெராம் பாடாங் தொகுதியில் களம் காணும் மண்ணின் மைந்தரான ஜி. மணிவண்ணன் இத்தொகுதிக்கான தனது மக்கள் நலப் பார்வையை முன்வைத்தார்.

மணிவண்ணன் கூறுகையில், "ஜெராம் பாடாங் தொகுதியில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், இங்குள்ள இளைஞர்கள் பலர் வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். தற்போதைய சூழலில் இத்தொகுதியில் பெரும்பாலும் முதிய பெற்றோர்களும், பணி ஓய்வு பெற்றவர்களுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் தேவையான உதவிகளையும் ஆதரவையும் எவ்வாறு முறையாகக் கொண்டு சேர்ப்பது என்பது குறித்த கோரிக்கைகளை தாம் முன்வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

அதேவேளையில், பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, மாற்றுத் திறனாளிகள் குறித்தும் அவர் விவரித்தார். பெண்கள் சிறு வணிகங்களில் ஈடுபடுவதற்கும், அவர்கள் சுயதொழில் மூலம் ஒரு நிரந்தர வருமானத்தை ஈட்டுவதற்கும் தேவையான வழிவகைகள் குறித்துப் பேசினார். இதற்காக மாநில அரசாங்கத்துடனும் மத்திய அரசாங்கத்துடனும் நேரடியாகக் கலந்தாலோசித்துச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் தம்மைத் தேர்ந்தெடுத்தால், இத்தகைய ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் ஜெராம் பாடாங் தொகுதிக்கு முழுமையாகக் கொண்டு வரப்படும் என்று மணிவண்ணன் உறுதியளித்தார். இத்தேர்தலில் ஜெராம் பாடாங் தொகுதியில் மணிவண்ணன், ஐந்து முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








