Dec 28, 2025
Thisaigal NewsYouTube
நண்பனே எதிரியானால்? - பெர்லிஸ் அரசியலில் வெடித்த 'துரோகம்'
அரசியல்

நண்பனே எதிரியானால்? - பெர்லிஸ் அரசியலில் வெடித்த 'துரோகம்'

Share:

கங்கார், டிசம்பர்.28-

பெர்லிஸ் மாநில முதல்வர் பதவியைப் பாஸ் கட்சியிடமிருந்து பெர்சாத்து கைப்பற்றிய அடுத்த சில நிமிடங்களிலேயே, பாஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் "துரோகம்" குறித்துப் பதிவிட்டுள்ளது மலேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "நான் வருத்தப்படவில்லை, மாறாக மகிழ்ச்சியடைகிறேன். இப்போதுதான் அவர்களின் உண்மையான முகத்திரை கிழிந்துள்ளது. இந்தத் துரோகத்திற்குத் தண்டனை நிச்சயம் உண்டு" என பாஸ் பொருளாளர் இஸ்கண்டார் சாமாட் பதிவிட்டு அதிரடி காட்டியுள்ளார்.

பாஸ் தகவல் தொடர்புத் தலைவர் அஹ்மாட் ஃபாட்லி ஷாரியோ, "நண்பனே நண்பனைச் விழுங்கி விட்டான். நண்பன் இப்போது எதிரியாக மாறிவிட்டான்" எனப் பதிவிட்டுள்ள நிலையில், இது பெர்சாத்து கட்சியைக் குறிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உடல்நலக் குறைவால் பாஸ் கட்சியின் ஷுக்ரி ரம்லி பதவி விலகியதைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சியின் அபு பாக்கார் ஹம்ஸா புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்றது இந்தக் கூட்டணிக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

"நட்பும் விசுவாசமும் ஒன்றிணைவது கடினம்" என பாஸ் கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவர் நூருல் இஸ்லாம் முஹமட் யுசோஃப் பதிவிட்டுள்ளமை, இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலைப் பகிரங்கப்படுத்தியுள்ளது. பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகச் சாடினாலும், பாஸ் தலைவர்களின் இந்தப் பதிவுகள் பெர்லிஸ் ஆட்சி மாற்றத்தில் நடந்துள்ள அரசியல் சதுரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

Related News