புத்ராஜெயா, நவம்பர்.07-
கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது மலேசியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்பந்தம் குறித்து குறைகூறி வரும் எதிர்க்கட்சியினரைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாகச் சாடினார்.
அந்த வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தின் உண்மையான அம்சங்களை விளங்கி கொள்ளாமல் கண்மூடித்தமான குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் அரசியல் விவாதங்களின் நிலை, அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்டு இல்லாமல், இன்னமும் தரம் தாழ்த்திய நிலையிலேயே உள்ளது. எழுப்பப்படும் எந்தவொரு விவகாரத்திலும் விளங்கிக் கொள்ளக்கூடிய ஆற்றல் குறைவாக உள்ளது என்று பிரதமர் சாடினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை படிக்காமலேயே விவாதங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் விவாதங்களை ஒப்பிடும் போது பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் சிறப்பாக விவாதிக்கின்றனர் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








