கோலாலம்பூர், நவ. 18-
ஓன் லைன் மோசடிகளில் ஏமாற்றுப் பேர்வழிகளின் மோசடி வேலைகளுக்கு தங்களின் வங்கிக் கணக்கை இரவலாக தரும் நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்பதுடன் அவர்களின் பணமும் பறிமுதல் செய்யப்படும் என்று சட்டத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் நபர்களின் வங்கிக்கணக்கை முடக்குவதற்கும், அவர்களின் சேமிப்புப்பணத்தை பறிமுதல் செய்வதற்கு போலீஸ் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
இரவலாக தரப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளைப் பயன்படுத்தி, தாங்கள் நடத்தும் மோசடி வேலைகள் மூலம் பெறப்படுகின்ற பணம், சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்கிலிருந்து எடுக்கப்படுவதை தடுக்க இச்சட்டம் வகை செய்கிறது.
குறிப்பாக. சந்தேகத்திற்கு இடமாக உள்ள வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் நடைபெறுவது, ஐயத்திற்கு இடம் அளிக்குமானால் அந்த வங்கி கணக்குகளை முடக்குவதற்கு குற்றவியல் சட்டம் 116 டி பிரிவு, போலீஸ் துறைக்கு அதிகாரம் வழங்குகிறது என்று நாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் குலசேகரன் விளக்கம் அளித்தார்.








