கோலாலம்பூர், டிச.16-
தாய்லாந்து பிரதமர் பாய்தோங்தாம் ஷினவத்ரா, மலேசியாவிற்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு, இன்று காலை கோலாலம்பூர் வந்தடைந்தார்.
தமது கணவர் பிதாகா சுக்சாவாட்டுடன் வருகை புரிந்துள்ள தாய்லாந்து பிரதமர் பாய்தோங்தாம் ஷினவத்ரா வை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி தாய்லாந்தின் 31 ஆவது பிரதமராக பொறுப்பேற்ற 36 வயது பெண்மணியான பாய்தோங்தாம் ஷினவத்ராவிற்கு புத்ராஜெயா பெர்டானா சதுக்கத்தில் மகத்தான சிவப்பு கம்பள வரவேற்பு நல்கப்பட்டது.
தாய்லாந்தின் பிரதமராக கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பதவி வகித்த தக்ஷின் ஷினவர்தாரவின் மகளான பாய்தோங்தாம் ஷினவத்ரா , மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகையாகும்.
.இவரது தந்தையின் சகோதரியும், அத்தையுமான யிங் லக், கடந்த 2011 ஆம் ஆண்டில் தாய்லாந்தின் 28 ஆவது பிரதமராக பதவி விகித்துள்ளார்.
தமது அதிகாரத்துவ வருகையின் போது, மலாய் அரச பட்டாளத்தைச் சேர்ந்த 102 வீரர்களும், மூன்று அதிகாரிகளும் வழங்கிய மரியாதை அணிவகுப்பை பாய்தோங்தாம் ஷினவத்ரா பார்வையிட்டார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் துணைப்பிரதமர்களான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ படில்லா யூசோப் காணப்பட்டனர்.








