கோலாலம்பூர், டிசம்பர்.17-
நாட்டின் பொதுத் தேர்தலை அடுத்து ஆண்டு நடத்துவதற்கான சாத்தியமில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் அவர் மறுத்தார்.
நாட்டில் தேவையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதும், மக்கள் எதிர்நோக்கியுள்ள அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தை நிவர்த்தி செய்வதும் தம்முடைய தற்போதைய முன்னுரிமையாகும் என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தேர்தலைப் பற்றி தாம் இன்னும் யோசிக்கவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சீர்திருத்தங்களை எவ்வாறு செயல்படுத்துவது மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வினால் அவதியுற்று வரும் மக்கள் பிரச்னையை எவ்வாறு குறைப்பது ஆகிய இரண்டு விவகாரங்களில் தம்முடைய தற்போதைய முழு கவனம் இருப்பதாக பிரதமர் விளக்கினார்.
இன்று புத்ராஜெயா ஸ்ரீ பெர்டானாவில் மூத்தப் பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.








