மலாக்கா, காடேக் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் வெள்ளப் பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் குற்றஞ்சாட்டினார்.
நேற்று பெய்த கனமழையால் அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மலாய், இந்திய, சீனக் குடும்பங்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் தரப்பினர் மனிதாபிமான அடிப்படையில் உதவியதாக அவர் தெரிவித்தார்.
அப்போது, உதவிப் பணிகளில் ஈடுபட்ட தங்களைப் பாரிசான் நேஷனல் தரப்பு கிராமத் தலைவர் தடுத்ததாகவும் ராயர் கூறினார். காடேக் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் கே. ஜெகசீலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின்னர் திசைகளுக்கு அளித்த பேட்டியில் ராயர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் பதவியில் இல்லாத காலத்திலும் மக்களுக்காகச் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்ததாகக் குறிப்பிட்ட ராயர், வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் காடேக் தொகுதி வேட்பாளர் கே. ஜெகசீலனுக்கு வாக்களிக்குமாறு தொகுதி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.








