மலாக்கா, புக்கிட் கட்டில் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் அட்லி ஸஹாரி, மாநிலத்தின் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மக்களின் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் குரலெடுத்துப் பேசவும், தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்தவும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்ட அட்லி ஸஹாரி, தொகுதி அளவிலான மக்கள் பணிகள், சட்டமன்றத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைத் திட்டங்கள் வாயிலாகத் தங்களின் செயல்திறனை நிரூபிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
வாக்காளர்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு என்றும், அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணடிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.








