Sep 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு: ஸாஹிட் ஹாமிடி, இஸ்மாயில் லாசிம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசனை
அரசியல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு: ஸாஹிட் ஹாமிடி, இஸ்மாயில் லாசிம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசனை

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில், அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தலைமையில் கோலாலம்பூரிலுள்ள அம்னோ தலைமையகத்தில் இன்று இரவு பாரிசான் நேஷனல், பாஸ் மற்றும் பார்ட்டி வாவாசான் நெகாரா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 25 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கவுள்ளனர்.

இந்த 25 சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருப்பதால், அவர்களின் கருத்துகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலர் அம்னோ தலைமையகத்திற்கு இன்று மாலை வருகை புரிந்தனர்.

அவர்களில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி பதவிகள் இரத்து செய்யப்பட்ட 10 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களில் சிக்காமட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ரஸாலி அபு சமா, செம்போங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஸைஃபுல்பாரி இட்ரிஸ், லிங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் ஃபைஸால் ரம்லி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்க வருகை புரிந்தனர்.

இந்நிலையில், மாநில நிர்வாகத்தை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து சாஹிட் ஹமீடி கூறுகையில், மாநில நிர்வாகத்தில் தலையிடாமல், தற்போதைய முட்டுக்கட்டைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் போது, 25 சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News