கோலாலம்பூர், ஜூன் 06-
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டுமே டீசல் உதவித் தொகையை அரசாங்கம் வழங்கவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் கூறியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, வரும் திங்கள்கிழமை விவசாயிகள், சிறு தோட்டக்காரர்கள் உள்பட சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, பூடி மடானி உதவித் தொகை திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 200 வெள்ளி செலுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
தனிநபர்களுக்கான BUDI, விவசாயிகள் மற்றும் சிறுதோட்டக்காரர்களுக்கான பூடி அக்ரி-கொமோடிதி, நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான MYSUBSIDI DIESEL ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.
அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து,சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் பொருளக கணக்குகளில் அந்த உதவித்தொகை செலுத்தப்படவிருப்பதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
பொருளக கணக்கைக் கொண்டிருக்காத விண்ணப்பதாரர்கள், தீபகற்ப மலேசியா முழுவதும் உள்ள பேங்க் சிம்பானான் நேஷனல் பொருளகத்தின் கிளைகளுக்கு சென்று, அவர்களது அடையாள அட்டையைக் காண்பித்து, அந்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரசாங்கத்தின் அந்த உதவித்தொகை, வாழ்க்கை செலவின அதிகரிப்பால் மக்கள் எதிர்கொண்டுவரும் அழுத்தங்களைக் குறைக்க உதவும்.
கூடிய விரைவில், பொது போக்குவரத்து வாகனங்களுக்கும், தரை வழி பொருள்களை ஏற்றிச்செல்லக்கூடிய குறிப்பிட்ட வாகனங்களுக்கும் அந்த உதவித்தொகை விரிவுபடுத்தப்படும் எனவும் நிதியமைச்சு உறுதியளித்துள்ளது.








