கோலாலம்பூர், டிசம்பர்.27-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் வீட்டுக் காவல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து ஜசெக-வைச் சேர்ந்த பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யியோ பீ யின் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, பூச்சோங் அம்னோ பிரிவு அதன் பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதியுடனான உறவைத் துண்டிப்பதாக அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை 4 மணிக்குள், யியோ பீ யின் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறிய பூச்சோங் அம்னோ பிரிவு, அவருக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், யியோ பீ யின் மன்னிப்புக் கேட்கும் காலக்கெடு முடிவடைந்து விட்டதாக், இனி பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதியிலும், ஶ்ரீ செர்டாங் மற்றும் ஶ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியிலும், பக்காத்தான் ஹராப்பானுடன் எந்த ஓர் அரசியல் ஒத்துழைப்பையும் பூச்சோங் அம்னோ வழங்காது என்று அதன் செயலாளர் யுசோஃப் யாசின் அறிவித்துள்ளார்.
நஜிப் வழக்கில் கடந்த வாரம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, "இந்த ஆண்டின் இறுதியைச் சிறப்பாகக் கொண்டாட மற்றொரு காரணம் தமக்கு கிடைத்துள்ளது என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினரான யியோ பீ யின் தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








