Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் இனவாதத்தை தூண்டி அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி - மந்திரி பெசார் அமிருடின் குற்றச்சாட்டு
அரசியல்

சிலாங்கூரில் இனவாதத்தை தூண்டி அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி - மந்திரி பெசார் அமிருடின் குற்றச்சாட்டு

Share:

சிலாங்கூர் மாநில ஆட்சி அதிகாரத்தையும், கூட்டரசு அரசாங்கத்தையும் கைப்பற்றும் நோக்கில் சில அரசியல் தரப்புகள் மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வைத் தூண்டி வருவதாக அம்மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஜசெக நிதி திரட்டும் விருந்தில் உரையாற்றிய அமிருடின் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பெயர்களை குறிப்பிடாமல், மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில் அச்சத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பதவி வகித்து வரும் அமிருடின், இத்தகைய அரசியல் தந்திரம் சிலாங்கூரின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய ஆபத்தான முயற்சி என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் தான் சிலாங்கூர் மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம் தொடர அரசியல் நிலைத்தன்மை மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இன, மதவாத அரசியலை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Related News