கோலாலம்பூர், அக்டோபர்.31-
இணையப் பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு, தீவிரவாதம் மற்றும் வன்முறை சார்ந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க மலேசியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்து இவ்வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தையில், இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டிந் மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் Pete Hegseth, ஆகிய இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு, தொடர்ந்து வலுப்பெற்று வருவதை இச்சந்திப்பில் உறுதிப்படுத்தினர்.
அதே வேளையில், அடுத்த ஆண்டு வாஷிங்டனில் உள்ள பெந்தகனில் மீண்டும் சந்திக்க இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இதனிடையே, தாய்லாந்து – கம்போடியா இடையிலான போர் நிறுத்த முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக இருந்த மலேசியாவிற்கு Pete Hegseth தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிராந்திய பாதுகாப்புப் படைகளை உள்ளடக்கிய ஆசியான் கவனிப்பாளர் குழுக்களை ஆதரிப்பதற்கான வாஷிங்டனின் உறுதிப்பாட்டை காலிட் நோர்டின் வரவேற்றார்.
மேலும், தென் சீனா கடற்பகுதி, பிராந்திய அமைதி மற்றும் வர்த்தகப் பாதைக்கு முக்கியமான கடல் வழியாக இருப்பதால், அதனைப் பாதுகாப்பது அவசியம் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.








