கோலாலம்பூர், நவம்பர்.14-
கார்டீனியா ரொட்டியுடன், சபா மக்களை ஒப்பிட்டுப் பேசிய கெடா சட்டமன்ற உறுப்பினரான மன்சோர் ஸாகாரியா, தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அவரது கருத்துகள் சபா மாநில மக்களிடையே மிகுந்த அவமானகரமானதாக பார்க்கப்பட்டதையடுத்து, அவர் தனது செயலுக்காக வருந்தியுள்ளார்.
கெடா மாநிலம், கோல கெடில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மன்சோர் ஸாகாரியா, கடந்த புதன்கிழமை சபா தேர்தல் பிரச்சாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசும் போது, சபா மக்களை வெல்ல, அவர்களுக்கு கார்டீனியா ரொட்டி வழங்கினாலே போதும், அவ்வளவு எளிதானது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவரது கருத்து, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, சபா மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சபா மக்களை அவமதிக்கும் நோக்கத்தில், தாம் அவ்வாறு கருத்துத் தெரிவிக்கவில்லை என்று கூறிய மன்சோர் ஸாகாரியா, மன்னிப்புக் கேட்டுள்ளார்.








