Oct 28, 2025
Thisaigal NewsYouTube
உதவித்தலைவர் தேர்தலில், ம.இ.கா. தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் தலையிட்டதாக, தி.மோகன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அரசியல்

உதவித்தலைவர் தேர்தலில், ம.இ.கா. தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் தலையிட்டதாக, தி.மோகன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 8-

நடந்து முடிந்த ம.இ.கா. உதவித்தலைவர் பொறுப்புக்கான தேர்தலில், ம.இ.கா. தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், அப்பதவிக்கு போட்டியிட்ட டத்தோ ஆர்.நெல்சனுக்கு நேரடியாக உதவியதாக, முன்னாள் உதவித் தலைவர் டத்தோ தி.மோகன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


டத்தோ ஆர்.நெல்சனுக்கு ஆதரவை வழங்கியதை விக்னேஸ்வரன் ஒப்புக்கொண்டதன் வழி, ம.இ.கா. தேர்தலின் நம்பகத்தன்மை கேள்விக்கு குறியாகியுள்ளதாக, உதவித்தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்டு தோல்வி கண்டுள்ள தி.மோகன் கூறினார்.


ம.இ.கா. தேர்தல் செயற்குழு தலைவராக இருந்துக்கொண்டு விக்னேஸ்வரன் அவ்வாறு செய்துள்ளது, தேர்தல் விதிமுறையை மீறும் செயல். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அவர் எவ்வாறு பரப்புரைகளை மேற்கொள்ள முடியும் என தி.மோகன் கேள்வியை எழுப்பினார்.


வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டிய கட்சி தேர்தலின் கொள்கைக்கு முரணாக, விக்னேஸ்வரனின் அச்செயல் உள்ளது.


கட்சியின் பல உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள தமது தோல்வியை, தாம் திறந்து மனதுடன் ஏற்றுக்கொள்வதாக கூறிய தி.மோகன், கட்சி தேர்தல் உண்மையில் நியாயமாக நடந்துக்கொண்டதாக கூறி, விக்னேஸ்வரன் மார்தட்டிக்கொள்ளக்கூடாது என்றார்.


அவரது தலையீட்டால் மட்டுமே, நெல்சன் 3ஆவது உதவித்தலைவராக அதிக வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளதை தி.மோகன் சுட்டிக்காட்டினார்.


தமக்கு வழங்கப்படவிருப்பதாக கூறப்படும் நியமன உதவித் தலைவர் பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்றும் கட்சியில் சாதாரண உறுப்பினராக தொடரப்போவதாகவும் தி.மோகன் திட்டவட்டமாக கூறினார்.


ம.இ.கா உதவித் தலைவர்களுக்கான தேர்தலில், முதலிடத்தில், டத்தோ அசோகன் 8 ஆயிரத்து 633 வாக்குகளும் இரண்டாவது இடத்தில் டத்தோ முருகையா 8 ஆயிரத்து 566 வாக்குகளும் மூன்றாவது இடத்தில் டத்தோ நெல்சன் 8 ஆயிரத்து 338 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News