சிரம்பான், மே.05-
சிரம்பானில் நாளை மாலை நடைபெறவுள்ள பக்காத்தான் ஹராப்பானின் மிகப் பெரிய அளவிலான பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, பல சாலைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக போலீஸ் அறிவித்துள்ளது.
Paroi-யிலுள்ள Tuanku Abdul Rahman மைதானத்தின் வாகன நிறுத்துமிடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், நிகழ்ச்சி சீராக நடைபெறுவதற்காக நாளை மாலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை சாலைகள் மூடல் அமலில் இருக்கும் என மாநில போலீஸ் தலைவர் அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.
அதன் படி, Taman Paroi Jaya-வில் உள்ள Jalan Kedidi, Lorong Kedidi -யிலுள்ள 1 முதல் 7 வரையிலுள்ள சாலைகள் மூடப்படவுள்ளன.
குறிப்பாக Lorong Kedidi 1 முதல் 7 வரையில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் சாலைப் பயனாளர்கள் மாற்று வழிகளாக Jalan Persiaran Merak மற்றும் Jalan Tok Dagang சாலைகளைப் பயன்படுத்துமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய உரையாற்றவுள்ளார்.
அவருடன் ஜசெக பொதுச் செயலாளர் Loke Siew Fook, Amanah தலைவர் Mohamad Sabu, பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் Saifuddin Nasution Ismail மற்றும் ஜசெக தலைவர் Gobind Singh Deo உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் மேடையைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.








